Wednesday, December 17, 2014

மின் கட்டண உயர்வை எதிர்த்த வழக்கின் கதி என்ன: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற அரசு நடவடிக்கை


சென்னை: மின் கட்டண உயர்வுக்கு தடை கோரிய மனுவை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற மனு தாக்கல் செய்ய உள்ளதாக, தமிழக அரசு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மின் கட்டணம் தொடர்பான வழக்கை விசாரிக்க, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக, அக் ஷயகுமார், உறுப்பினராக ராஜகோபால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ரசூல், மனுத் தாக்கல் செய்தார். ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரி, சென்னை பார் அசோசியேஷன் தலைவர் தமிழ்மணி, மனுத் தாக்கல் செய்தார்.மின் கட்டண உயர்வுக்கு தடை கோரி, மூத்த வழக்கறிஞர் காந்தி, தாக்கல் செய்த மனுவில், 'மின் கட்டணத்தை உயர்த்த, முடிவு செய்யப்பட்டுள்ளது; ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள், மின் கட்டணம் தொடர்பாக முடிவு எடுக்க முடியாது' என, கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று மனுக்களும், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரரான, மூத்த வழக்கறிஞர் காந்தி, மற்றொரு மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினர். அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் அப்துல் சலீம் ஆஜரானார்.

மனுக்களை விசாரித்த, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் நியமனம் தொடர்பான, இரண்டு மனுக்களையும், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (நேற்று) விசாரணைக்கு வந்துள்ளது.அந்த மனுவுக்கு பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் கட்டணம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் இருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மனு நிலுவையில் இல்லாததால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, மூத்த வழக்கறிஞர் கோரினார். ஏற்கனவே, இரண்டு வழக்குகளில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையிலும், அரசு வழக்கறிஞரின் கருத்தின் அடிப்படையிலும், இந்த வழக்கை நாங்கள் பரிசீலிப்பது முறையாக இருக்காது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

No comments: